சுத்தம் செய்தபோது விபரீதம் கழிவுநீர் தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி

பெரம்பூர்:  அயனாவரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அயனாவரம், அம்பேத்கர் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் குட்டி (45), கூலித்தொழிலாளி. திருமணமாகாத இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அதே தெருவில் உள்ள விஜயா என்பவர் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் நேற்று அடைப்பு ஏற்பட்டதால், அதை சரி செய்ய குட்டியை அழைத்துள்ளார். இதையடுத்து, குட்டி தனது நண்பர் உதயச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார்.

 4 அடி ஆழமுள்ள அந்த கழிவுநீர் தொட்டியில் உதயச்சந்திரன் உள்ளே இறங்கி கழிவுநீரை பக்கெட்டில் எடுத்து கொடுத்து கொண்டிருந்தார். அதனை குட்டி வாங்கி வெளியே ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலைதடுமாறி குட்டி தொட்டியின்  உள்ளே விழுந்துள்ளார். இதை பார்த்து உதயச்சந்திரன் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உதயசந்திரன் உதவியுடன் குட்டியை மீட்டு மேலே கொண்டு வந்து படுக்க வைத்தனர்.

பின்னர், 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், குட்டியை பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அயனாவரம் போலீசார், குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

More