கோவையில் கொட்டி தீர்த்த கனமழை 10 அடி வெள்ளத்தில் கார் சிக்கியது 3 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர்

கோவை: கோவையில் பெய்த கனமழை காரணமாக நேற்று அவினாசி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கார்  மழைநீரில் சிக்கியது. காரில் இருந்த 3 பேரும் கீழே குதித்து வெளியே வந்து உயிர் தப்பினர். கோவையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில் கோவை,  மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது.

இதில் கோவை அவினாசி மேம்பாலம் கீழ் பகுதி சாலையில் 10 அடி ஆழத்துக்கு மழை நீர் சூழ்ந்தது. அதில் அவ்வழியாக வந்த கார் சிக்கிக்கொண்டது. உடனடியாக காரில் இருந்த 3 பேரும் கீழே குதித்து உயிர் தப்பினர். கார் முழுவதும் மூழ்கியது. அதேபோல் லங்கா கார்ணர் பகுதியில் 3 அடி ஆழம் வரை மழைநீருடன் சாக்கடை நீர் சூழ்ந்தது. இதில் தனியார் பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டது. கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. ராம்நகர் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை முற்றிலும் மூழ்கியது. அங்கு உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் கோவையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுவர் இடிந்து மூதாட்டி பலி: கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா, தேவம்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.   நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், கிழக்கு வீதியில் ஒரு வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் ராஜம்மாள்(71) பரிதாபமாக இறந்தார்.

Related Stories: