கார் டயர் வெடித்து ஸ்கூட்டர் மீது பயங்கர மோதல் எம்பிபிஎஸ் மாணவிகள் இருவர் உள்பட 3 பேர் பலி

கேடிசி நகர்: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள், தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த திவ்யபாலா (23), பாவூர்சத்திரத்தை சேர்ந்த திவ்யா காயத்ரி (23), மதுரையை சேர்ந்த பிரிட்டா ஏஞ்சலின் ராணி (23). இவர்கள் 3 பேரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர். நேற்று காலை 9 மணியளவில் பாளை. ரெட்டியார்பட்டி 4 வழிச்சாலையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு 3 பேரும் ஒரே ஸ்கூட்டரில் புறப்பட்டனர். ரெட்டியார்பட்டி மலையடிவார 4 வழிச்சாலை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடி நோக்கி வந்த காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் மறுபக்கம் வந்த மாணவிகளின் ஸ்கூட்டர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் மொபட்டில் வந்த மாணவிகள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இவர்களில் பிரிட்டா ஏஞ்சலின் ராணி, திவ்யா காயத்ரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திவ்யபாலா பலத்த காயமடைந்தார். காரை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (45), கோட்டாறை சேர்ந்த பூ வியாபாரி சண்முகசுந்தரம் (41), பேரூரை சேர்ந்த பெருமாள் (40) ஆகியோரும் படுகாயமடைந்தனர்.

காரில் இருந்த 3 பேர் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவி திவ்யபாலா ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம்  நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். காரை ஓட்டி வந்த  டிரைவர் சந்தோஷ்குமார், மருத்துவக்கல்லூரி மாணவி திவ்யபாலா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காரில் இருந்த பெருமாள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார். உயிரிழந்த 2 மாணவிகளின் உடல்களை பார்த்து சக மாணவ, மாணவிகள் கதறியழுதது, நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவத்தால் மருத்துவக்கல்லூரி வளாகம் சோகத்தில் மூழ்கியது.

Related Stories:

More