தமிழகம் முழுவதும் 13ம் கட்ட மெகா முகாமில் 20.98 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை: கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 12 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. இவை தவிர வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடும் பணி செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 80 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 45 சதவீதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

இந்நிலையில் 13வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடந்தது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் செயல்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

அதன்படி நேற்று நடந்த 13வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில்  20,98,712 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணையாக 7,50,147 பேருக்கும், இரண்டாவது தவணையாக 13,48,565 பேருக்கும் தடுப்பூசி ெசலுத்தப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி மையங்களில் மட்டுமே 7 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தடுப்பூசி  முகாம்களை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். மேலும் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் வந்த பேருந்தில் ஏறி பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறீர்களா? என்று விசாரித்து தடுப்பூசியின் அவசியம் குறித்து விளக்கினார்.

Related Stories:

More