வலுவிழக்கிறது ஜவாத்’ புயல் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: ஜவாத் புயல் இன்று வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரம் நிலை கொள்ளும் எனவும், தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.  6ம் தேதி (நாளை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

7ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 8ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஓடி மின்னலுடன் கூடிய மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஏனைய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சேலம் மாவட்டம் எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் மோகனுரில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 8 செ.மீ, மேட்டூர் 7 செ.மீ, கரூர் 6 செ.மீ, திருச்ெசங்கோடு, ராசிபுரம், சேலத்தில் 5 செ.மீ, நாகர்கோவில், சிவகாசியில் 4 செ.மீ, வாழப்பாடி, ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 செ.மீ, வால்பாறை, ராஜபாளையம், குன்னூர், தேக்கடி, தாளவாடி, சின்னக்கல்லாரில் 2 செ.மீ, பரமத்தி வேலூர், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, திருமங்கலம், ஓமலூர், சத்தியமங்கலம், சோழவந்தான், நாமக்கல்லில் 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் (இன்று) வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும். இதன் காரணமாக இன்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

Related Stories:

More