வீடு திரும்பினார் கமல்ஹாசன்

சென்னை: கொரோனாவிலிருந்து குணமான நடிகர் கமல்ஹாசன், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கடந்த மாதம் அமெரிக்கா சென்று வந்தார். அதன் பிறகு இருமல் காரணமாக பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து போரூர் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பிறகு அவர் கொரோனாவிலிருந்து மீண்டார். இதையடுத்து அவர் நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது  சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது குறித்து டிவிட்டரில் கமல்ஹாசன் கூறும்போது, ‘முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும்.

தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். நான் நலம் பெற வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரார்த்தனை செய்த ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: