குறைந்தபட்ச ஆதரவு விலை உட்பட 6 கோரிக்கை ஒன்றிய அரசுடன் பேச 5 பேர் குழு அமைப்பு : விவசாய சங்க கூட்டத்தில் அறிவிப்பு

புதுடெல்லி: குறைந்தப்பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 6 கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, 5 பேர் கொண்ட குழுவை விவசாயிகள் சங்கம் அமைத்துள்ளது. விவசாயிகளின் ஓராண்டு தொடர் போராட்டத்துக்கு பணிந்து, சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிரதமர் மோடி அறிவித்தார். மேலும்,  இச்சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த திங்கட்கிழமையே தாக்கல் செய்து நிறைவேற்றினார். ஆனால், குறைந்தப்பட்ச ஆதரவு விலை, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தொடரப்பட்ட  வழக்குகளை ரத்து செய்தல், போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உட்பட 6 புதிய கோரிக்கைகளை வைத்த விவசாயிகள், இவற்றை நிறைவேற்றாத வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என அறிவித்தனர். அதன்படி, டெல்லி எல்லைகளில் அவர்களின் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரை செய்யும்படி, விவசாய சங்கங்களை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டது. தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் நிர்வாகிகள் டெல்லியில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். அதில், ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில், விவசாய சங்கங்களை சேர்ந்த பல்பீர் சிங் ராஜேவால், அசோக் தவாலே, சிவகுமார் கக்கா, குர்மன் சிங் சதுனி, யுத்வீர் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க வரும் 7ம் தேதி மீண்டும் கூடுவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்

கூட்டத்துக்குப் பிறகு பேட்டி அளித்த விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத், ‘‘விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறாத வரையில், டெல்லி போராட்டக்களத்தை விட்டு ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம். வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான உத்தரவாதத்தை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories:

More