மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் பட்டப்படிப்புகளாக விரைவில் மாற்றம்: அகில இந்திய மருத்துவ கவுன்சில் பரிசீலனை.!

வேலூர்: மருத்துவப்படிப்புகளில் எம்பிபிஎஸ், எம்.எஸ் போன்ற இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை முடிக்கும் டாக்டர்கள் கூடுதல் தகுதியாக மகப்பேறு, கண்சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை என பல்வேறு சிறப்பு பிரிவு படிப்புகளையும் படிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து மருத்துவசேவையில் ஈடுபடும் செவிலியர், மருந்தாளுனர், லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன், ஈசிஜி டெக்னீசியன், ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர், மருத்துவ உதவியாளர், செவிலிய உதவியாளர், மருத்துவ லாண்டரி டெக்னீசியன் என பல்வேறு மருத்துவம் சார்ந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை பல்வேறு மருத்துவக்கல்லூரிகளும், மருத்துவக்கல்வி நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இதில் செவிலியர், மருந்தாளுனர் படிப்புகளில் டிப்ளமோ தவிர இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. அதேபோல் பிற மருத்துவம் சார்ந்த படிப்புகளிலும் டிப்ளமோவுடன் பட்டப்படிப்புகளும் உள்ளன.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது செவிலியர், மருந்தாளுனர் உட்பட மருத்துவ சேவை சார்ந்த பணியிடங்களில் டிப்ளமோ முடித்தவர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில் சமீப காலமாக பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் டிப்ளமோ முடித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதாக கூறி நீதிமன்றங்களில் வழக்குகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் மருத்துவசேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக செவிலியர், மருந்தாளுனர் உட்பட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளை போன்றே, மருத்துவம் சார்ந்த அனைத்து டிப்ளமோ படிப்புகளையும் பட்டப்படிப்புகளாக மாற்ற அகில இந்திய மருத்துவ கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி மருத்துவம்சார்ந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை முடித்தவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக அரசு மருத்துவமனை மருந்தாளுனர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘ஏற்கனவே மருந்தாளுனர் பணியிடங்களில் பி.பார்ம் முடித்தவர்களை நியமித்து வருகின்றனர். அதேபோல் செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. மருத்துவ சேவையில் இதுபோன்று டிப்ளமோ முடித்தவர்களை நட்டாற்றில் விடுவது சரியல்ல என்பதற்காக வழக்குகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ கவுன்சிலர் மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்துதல் என்று கூறி டிப்ளமோ படிப்புகளை முடக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது மருத்துவம்சார்ந்த டிப்ளமோ படிப்புகளை பி.எஸ்சி நர்சிங் போன்று பட்டப்படிப்புகளாக மாற்றப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. கேட்டால் வெறும் பரிசீலனை என்கிறார்கள். ஏற்கனவே பார்மசிஸ்ட், செவிலியர் பணி நியமனங்களால் நாங்கள் வேதனையடைந்துள்ள நிலையில் இதுபோன்று பரிசீலனையே தவறு’’ என்று கூறினர்.

Related Stories: