பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை திறப்பு: சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் திறந்து வைத்தனர்.!

அம்பை: தொடர் மழையால் மணிமுத்தாறு அணை நிரம்பியதை தொடர்ந்து பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் இன்று முதல் திறக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டு தண்ணீர் திறந்து விட்டனர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும். பெரும்பாலும் டிசம்பர் முதல் வாரத்தில் இரு அணைகளும் நிரம்புவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதமே பாபநாசம் அணை நிரம்பிய நிலையில் மணிமுத்தாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது வடகிழக்கு பருவமழை  காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு அதிக நீர்வரத்து உள்ளது. பாபநாசம் அணை நிரம்பிய நிலையில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 115.50 அடியாக உயர்ந்தது. அணையில் தற்போது 96 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 697கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையை பொறுத்தவரை அணையின் பாதுகாப்பு கருதி 117 அடிக்கு தண்ணீர் தேக்கப்படும். அதற்கு மேல் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படும். அதன்படி நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து இன்றுமுதல்  தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக அரசு உத்தரவுப்படி கலெக்டர் விஷ்ணு முன்னிலையில்  சபாநாயகர் அப்பாவு, மணிமுத்தாறு அணையின் பிரதான கால்வாயில் இருந்து இன்று காலை தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து 100 கனஅடி வீதம் வரும் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிவரை 110 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் 1வது ரீச் மற்றும் இரண்டாவது ரீச்களின் மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, பொட்டல், வீரவநல்லூர், சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த மொத்தம் 11 ஆயிரத்து 134 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ், பொதுப்பணித் துறை தாமிரபரணி கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் தங்கரா்சு, உதவி பொறியாளர்கள் முருகன், மாரியப்பன், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், அம்பை தாசில்தார் வெற்றிச்செல்வி, சேரை ஒன்றிய திமுக செயலாளர்கள் முத்துப்பாண்டி, ராஜகோபால், நகர செயலாளர்கள் கல்லிடை இசக்கி பாண்டியன், வீரை அப்துல் ரகுமான், சேரை மணிஷா செல்வராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வேல்முருகன், சீவல முத்துக்குமார், அண்ணாதுரை  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: