தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை: பங்க் முற்றுகை

திருப்பூர்: திருப்பூரில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்த பெட்ரோல் பங்க்கை வாகன ஓட்டுநர்கள் முற்றுகையிட்டனர். திருப்பூர் போயம்பாளையம் பழனிசாமி நகரில் இந்திய பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இதன் டீலர் மோகன் ஆவார். இங்கு தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மும்மூர்த்தி நகரை சேர்ந்த மேஸ்திரி முருகேஷ் (50) என்பவர் இந்த பங்கில் கேனில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கியுள்ளார். கேனில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் நிரம்பியுள்ளது.

இது குறித்து பங்க் ஊழியர் வாசு, செல்வகுமாரிடம் கேட்டபோது, ‘‘மேலாக உள்ள தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு மீதமுள்ள பெட்ரோலை வண்டிக்கு ஊத்துங்க’’ என்று கூறியுள்ளனர்.

இதனால் அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே முன்னதாக பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பிச்சென்ற அதே பகுதியை சேர்ந்த அபினேஷ், மனோஜ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் தங்களது பைக் பழுதானதால் டிஒய்எப்ஐ ஒன்றிய செயலாளர் அருள் தலைமையில் பங்க்கை முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார், தொட்டிப்பாளையம் விஏஓ சுபாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வடக்கு தாசில்தார் வெளியூர் சென்றுள்ளதால் பெட்ரோல் பங்க்கில் தண்ணீரில் கலந்து வருவது குறித்து நாளை வந்து புகார் அளிக்கும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் கலைந்து சென்றனர். பங்க் தற்காலிகமாக மூடப்பட்டது.

Related Stories:

More