வேளாண் விளைபொருட்கள் விவகாரம்; ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட விவசாயிகள் குழு அமைப்பு

டெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை, விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக திரும்ப பெற்று கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கான மசோதா கடந்த திங்கட்கிழமை, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மசோதா திரும்ப பெறப்பட்டது.

இதற்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்த போதிலும், குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி, இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், விவசாய சங்கங்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இதில், எஞ்சிய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். இந்த 5 பேர் கொண்ட குழுவில் விவசாயிகள் சங்க நிர்வாகிகளான பல்பீர்சிங் ராஜவால், ஷிவ்குமார், குர்னாம் சிங், யுத்வீர் சிங், அசோக் தவாலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories:

More