புதுவையில் நாளை மறுநாள் முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு; 9 முதல் பிளஸ்2 வரை முழுநேர வகுப்புகள்.!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா 2ம் அலை காரணமாக கடந்த மார்ச் 21ம்தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு 2021-2022 புதிய கல்வியாண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த செப்டம்பர் 2வது வாரத்தில் தான் 9 முதல் பிளஸ்2 வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் செயல்படத் துவங்கிய நிலையில் தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனிடையே இந்த கல்வியாண்டிற்கான 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை மறுநாள் (6ம்தேதி) முதல் புதுச்சேரி மாநிலத்தில் திறக்கப்படுகிறது. புதுச்சேரி, காரைக்கால் மட்டுமின்றி மாகே, ஏனாமில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை கல்வியமைச்சர் நமச்சிவாயம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 6 மாதங்களுக்குபிறகு குழந்தைகள் பள்ளிகளுக்கு திரும்பவுள்ள நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே புதுச்சேரியில் 9 முதல் பிளஸ்2 வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 9, 11ம் வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளியிலும், 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடந்து வருகிறது. இதிலும் ஒரே வகுப்பில் மாணவர்கள் அதிகமுள்ள தனியார் பள்ளிகளில் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி ஷிப்ட் முறையும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அரைநாள் மட்டுமே இந்த வகுப்புகள் நடைபெற்ற நிலையில் 6ம்தேதி முதல் முழுநேரமாக செயல்படும். அதேவேளையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.  மாணவர்கள் அதிகமில்லாத பள்ளிகளில் தினமும் வகுப்புகளை நடத்துவது தொடர்பாகவும் கல்வித்துறை சில அறிவுரைகளை பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்கி வருவதாக தெரிகிறது. ஒவ்வாரு பள்ளிகளும் தங்களது இடவசதி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்புகளை நோய் தொற்று பரவலுக்கு இடம் கொடுக்காத வகையில் நடத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கல்வித்துறை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: