பொள்ளாச்சியில் ஹாட்டர் பலூன் திருவிழா; சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

கோவை: கோவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் வருங்காலத்தில் படகு வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இதனால், 2 குளங்களிலும் படகு வசதிக்கான சாத்திய கூறுகள் என்னென்ன உள்ளன? என்பதை ஆய்வு செய்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி பணிகளில் 75 சதவீதம் பணிகள் நிறைவுற்று இருக்கின்றன. மீதமுள்ள 25 சதவீதம் பணிகள் முடிந்து கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் நின்றவுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொரோனோ தொற்று பரவல் காரணமாக சுற்றுலா தலங்களில் பணிகள் வேகமாக செய்ய முடியவில்லை. சுற்றுலாத்துறைக்கு என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்ததன்பேரில் தனி நிதி ஒதுக்கியிருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் உள்ளூர் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த உள்ளோம். தமிழ்நாடு ஓட்டல்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும். கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாத்துறையில் வருவாயை இழந்துள்ளோம். தமிழ்நாடு ஓட்டல்களில் சொமேட்டோ, சுவிக்கி போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் உணவு பெற ஏற்பாடு செய்துள்ளோம். ஆன்லைன் மூலம் தமிழ்நாடு ஓட்டல்களில் புக் செய்ததால் மட்டும் ரூ. 22 லட்சம் வருவாய் வந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் நடந்த ஹாட்டர் பலூன் திருவிழாவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் கலந்து கொண்டது. பொள்ளாச்சியில் ஹாட்டர் பலூன் திருவிழா கூடிய விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More