போரூர், மவுலிவாக்கம், அய்யப்பன்தாங்கலில் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு.!

பூந்தமல்லி: போரூர், அய்யப்பன்தாங்கல் மற்றும் மவுலிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றார். வெள்ள நிவாரண உதவிகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றார்.

 இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை மவுலிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தனலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, அய்யப்பன்தாங்கலில் மதுரம் நகர், சீனிவாசா நகர், பரணிபுத்தூர், கொளுத்துவான்சேரி, முத்துநகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதி குடியிருப்புகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி உள்ள பகுதிகளை பார்வையிட்டார். அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், மவுலிவாக்கம், மாங்காடு சாலை, தனலட்சுமி நகர் பகுதிகளிலும் முதல்வர் ஆய்வு செய்தார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் நின்றபடி, போரூர் ஏரி மற்றும் அதன் உபரிநீர் வெளியேறும் பகுதியையும் பார்வையிட்டார். அங்கு மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைவில் அகற்றவும் எதிர்காலத்தில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்பின்னர் பரணிபுத்தூர் பெட்ரோல் பங்க் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவி பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்பி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: