விசாரணைக்கு எப்போது வர முடியும் என்று மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டனர்: வெங்கடாசலம் தற்கொலை குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: வெங்கடாசலம் தற்கொலை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெங்கடாசலம் இறந்த நாளன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணைக்கு எப்போது வர முடியும் என கேட்டுள்ளனர். விசாரணைக்கு எப்போது வர முடியும் என்று மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டுள்ளனர் என குறிப்பிட்டார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் நேற்று முன்தினம் திடீரென தற்கொலை செய்துகொண்டார். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெறும் நிலையில் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், விசாரணைக்கு எப்போது வர முடியும் என்று மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டனர். வெங்கடாசலத்தின் செல்போன், டேப் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் அவருக்கு சம்மன் வழங்கவோ, விசாரிக்கப்படவோ இல்லை என்று குறிப்பிட்டார். கடந்த 201ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு அதிமுக ஆட்சியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் நியமிக்கப்பட்டார்.

பதவியில் இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் வெங்கடாசலம் ஈடுபட்டதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக வெங்கடாசலத்திற்கு சொந்தமான வீடுகளில் நடைபெற்ற சோதனையில் 10 லட்சம் ரூபாய் பணம், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தனக் கட்டைகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு வெங்கடாச்சலம் வேளச்சேரியில் உள்ள வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: