வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, குமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவையில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூரில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. டிசம்பர் 6, 7ல் தமிழ்நாட்டில் பரவலாக இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 8ல் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கக்கடலில் நிலவும் புயல் மாலை 6 மணிக்குள் வலுவிழந்து  தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

ஜாவத் புயலால் வங்கக்கடலில் மத்திய மேற்கு, வட ஆந்திரா, ஒடிசா கரையோரத்தில் புயல் காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசும். வங்கக்கடலில் மத்திய மேற்கு, ஆந்திரா, ஒடிசா கரையோரத்தில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் புயல் வீசும். இதன் காரணமாக 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக எடப்பாடி, மோகனூரில் தலா 9, வெம்பக்கோட்டை, மேட்டூரில் தலா 8 செ.மீ. மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: