தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா காலமானார்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!!

ஆந்திரா: தமிழக முன்னாள் ஆளுநரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசைய்யா வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு சிவலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட 88 வயதாகும் ரோசைய்யாவுக்கு இன்று காலையில் நாடித் துடிப்பு குறைந்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் ஐதராபாத் தனியார் மருத்துவனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மறைந்த ரோசய்யா அவர்கள் 2009 - 2010 வரை ஆந்திர முதலமைச்சராகவும், 2011 - 2016 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு ஆளுநராகவும் பதவி வகித்தவர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பின்னர், இவர் முதல்வரானார். 2014ம் ஆண்டு சில மாதங்கள் கர்நாடகாவின் ஆளுநராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோசைய்யா மறைவுக்கு ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் திரு. ரோசய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திர முதலமைச்சராக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆளுநராகப் பணியாற்றிய அவர் - சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர் மற்றும் மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தவர். அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பாகும்.திரு.ரோசய்யா அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

தமிழிசை சவுந்தராஜன்:

தமிழகத்தின் முன்னாள் ஆளுநராகவும், ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் மிகச் சிறப்பாக செயலாற்றிய திரு. ரோசய்யா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.மிக உயரிய பதவியில் இருந்தாலும் மக்கள் மிக எளிதாக அணுகக்கூடிய தலைவராக திகழ்ந்தவர் என குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: