ஒமிக்ரான் தொற்று எதிரொலி: மாநிலம் முழுவதும் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்தது கர்நாடக அரசு..!!

பெங்களூரு: கர்நாடகாவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட இருவரில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் நாடு திரும்பிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் சிகிச்சையில் உள்ளார். ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கல்வி நிறுவனங்களில் கொண்டாட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், ஒமிக்ரான் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்க நபருக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கொடுத்த ஆய்வகத்தில் விசாரணை நடதப்பட்டு வருவதாக தெரிவித்தார். விமான நிலையங்களில் வைத்து எடுக்கப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையை இறுதி என தெரிவித்துள்ள கர்நாடக அரசு, நெகட்டிவ் வந்தால் மட்டுமே பயணிகள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர் என கூறியுள்ளது. ஒமிக்ரான் பாதித்த மருத்துவரின் தொடர்பில் இருந்தவர்களில் அவரது மனைவி உள்பட 5 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர் வீட்டின் அக்கம்பக்கம் உள்ளிட்ட இடங்களில் தொடர்புகளை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகாவிற்கு விமானங்களில் இருந்து வந்த 10 பேர் எங்கிருக்கிறார்கள் என தெரியாத நிலையில், அவர்களை தேடும் பணியும் முடிக்கிவிடப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 15 பேர் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 4 பேர் உள்பட 9 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயலாற்றாது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: