8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் மனைவியுடன் கைது

திருச்சி: திருச்சி புத்தூர் வண்ணாரபேட்டையில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள பள்ளி விடுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் ஆதரவற்ற  மாணவ, மாணவிகள் 40 பேர் தங்கி படித்து வருகின்றனர். பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வராக ஜேம்ஸ்(52) உள்ளார். இவரது மனைவி ஸ்டெல்லாமேரி (45). இருவரும் பள்ளி விடுதியில் தங்கியிருந்து மாணவர்களை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு விடுதியில் தங்கியிருந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். பெற்றோரை இழந்த 14வயது திருச்சி மாணவி ஒருவர் விடுதியில் தங்கியிருந்தார். அன்றிரவு குடிபோதையில் விடுதிக்கு சென்ற பள்ளி தாளாளர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்தமாதம் 12ம்தேதி பாதிக்கப்பட்ட மாணவியை, அவரது வளர்ப்பு தாயிடம் ஸ்டெல்லாமேரி ஒப்படைத்துள்ளார். நேற்றுமுன்தினம் வீட்டில் அழுது கொண்டிருந்த மாணவியிடம், அவரது வளர்ப்பு தாய் கேட்டுள்ளார். அப்போது நடந்து சம்பவங்களை மாணவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் வளர்ப்பு தாய் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போலீஸ் உதவி கமிஷனர் வினிதா நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்றார். பின்னர் தாளாளர் ஜேம்ஸ், இவரது மனைவி ஸ்டெல்லாமேரி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினார். இதைதொடர்ந்து போலீசார் பள்ளி தாளாளர் ஜேம்ஸ், அவரது மனைவி ஸ்டெல்லாமேரி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

More