ராமநாதபுரம் அருகே வைகை ஆற்றில் கரை உடைப்பு 15 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது: 600 ஏக்கர்கள் பயிர்கள் மூழ்கி நாசம்

ராமநாதபுரம்: வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் ராமநாதபுரம் அருகே 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் புகுந்தது. போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை உள்ளிட்ட கண்மாய்கள் மற்றும் 100 சிறு, குறு கண்மாய்களில் தேக்கப்படுகிறது. வைகை ஆறு பரமக்குடி அருகே பார்த்திபனூரில் 300 மீட்டர் அகலமாகவும், ராமநாதபுரம் காருகுடி தலை மதகணை பகுதியில் 50 மீட்டராக சுருங்கியும் காணப்படுகிறது.

இந்நிலையில் வைகை ஆற்றில் திறக்கப்பட்ட வெள்ளம் ராமநாதபுரம் காருகுடி தலை மதகணை பகுதியை நேற்று முன்தினம் வந்தடைந்தது. அப்போது கரையில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ராமநாதபுரம் அருகே உள்ள மென்னந்தி, ஆர்.காவனூர், புல்லங்குடி, செவ்வூர், முதலூர் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஆர்.காவனூர் துணை மின்நிலையத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் தடைபட்டுள்ளது.

மேலும் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், இக்கிராமங்கள் வழியாக ராமநாதபுரத்தில் இருந்து பாண்டியூர், நயினார்கோவில் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளநீர் புகுந்ததால் 600 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் நாசமாயின. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

போடிமெட்டில் மீண்டும் மண்சரிவு

போடி: தேனி மாவட்டம், போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் தமிழக - கேரள மாநிலங்களை இணைக்கும் வகையில் போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. தொடர் மழையால் இச்சாலையில் மண் சரிவு தொடர்கதையாக உள்ளது. நேற்று முன்தினம் 23 இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து இரவில் 7வது, 8வது கொண்டை ஊசி வளைவு இடையே புலியூத்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. பாறைகள், மரங்கள் நடுரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More