ரவுடி கொலைக்கு பழிக்குப் பழி வாங்க 3 வாலிபர்களுக்கு சரமாரி வெட்டு: தந்தை, மகன்களுக்கு வலை

ஆவடி: கொரட்டூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரவிந்தன்(24). பிரபல ரவுடி, கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, திருமுல்லைவாயல் மேட்டு தெரு ஆகாஷ்(25), கொரட்டூர் காமராஜர் நகர் பிரசாந்த்(27), அவரது தம்பி மணி(25) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகியோர் நீதிமன்றத்திற்கு சென்று பின்னர் மாநகர பேருந்து மூலம் பாடிக்கு வந்து கொண்டிருந்தனர்.

தகவலறிந்து கொலை செய்யப்பட்ட அரவிந்தனின் தந்தை ரவி(65), சகோதரர்கள் அப்புன்ராஜ்(32) விவேக்(30) ஆகியோர் பாடி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது, அவர்கள் வந்த பேருந்து பாடி பஸ் நிறுத்தத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து, இவர்கள் மூவரும் பஸ்சுக்குள் ஏறிச்சென்றனர். இதனை பார்த்த ஆகாஷ், பிரசாத், மணி 3 பேரும் பயந்து பஸ்சிலிருந்து இறங்கி வெளியே ஓடினர்.

அப்போது, ரவி, அப்புன்ராஜ், விவேக் ஆகிய மூவரும் சேர்ந்து ஆகாஷ் பிரசாத், மணி ஆகியோரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மூவருக்கும் பலத்த காயம் வெட்டு ஏற்பட்டு உயிருக்கு போராடினர். இதனை பார்த்த ரவி, அப்புன்ராஜ், விவேக் மூவரும் தப்பி ஓடினர். தகவலறிந்த கொரட்டூர் போலீசார் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: