சஸ்பெண்ட் எம்பி.க்களை கண்டித்து நாடாளுமன்றத்தில் பாஜ போட்டி போராட்டம்: இருஅவைகளிலும் சலசலப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை துவங்கியது. அப்போது, மாநிலங்களவையில் மோசமாக நடந்து கொண்டதற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்த எம்பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தினமும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சினரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சி எம்பி.க்களை கண்டித்து,  பதாகைகளுடன் அங்கு சென்று பாஜ எம்பி.க்களும் நேற்று போட்டி போராட்டம் நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இப்பிரச்னையை மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் கிளப்பினார். அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகார இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், `காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த பாஜ எம்பி.க்களுக்கும் உரிமை உள்ளது,’ என்றார். மாநிலங்களவையிலும் இப்பிரச்னை கிளப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்கும் மசோதாவை மக்களவையில் கடும் எதிர்ப்பைமீறி ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.

ஒரு முடிவுக்கு வாருங்கள் பாஜ எம்பி.க்கள் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய பிரச்னையை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கிளப்பியபோது, ‘இரு அவைகளின் கட்சித் தலைவர்களும் பேசி, நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற முடிவு எடுங்கள்,’ என்று அவை தலைவர் வெங்கையா அறிவுறுத்தினார்.

Related Stories: