பூரி அருகே ஜாவத் புயல் நாளை கரை கடக்கிறது ஆந்திரா, ஒடிசாவுக்கு ரெட் அலர்ட்: தேசிய பேரிடர் மீட்புப்படை தயார்நிலை

புதுடெல்லி: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘ஜாவத்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவின் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நாளை  காலை ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரை அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முன்னேற்பாடுகளை செய்யும்படி பிரதமர் மோடி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், புயல் நாளை கரையை கடக்கும்போது கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கடும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்பதால்,  மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 64 மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் இயக்குனர் ஜெனரல் அதுல் கர்வால் இது குறித்து கூறுகையில், “ஒடிசாவில் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் 46 குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபடும் வகையில் தயாராக இருக்கின்றனர். மேலும், 16 குழுக்களும் தயார் நிலையில் உள்ளது. ஒரு தேசிய பேரிடர் மீட்பு குழுவில் 30 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்,” என்றார்.

இதேபோல், ஆந்திர மாநிலத்திலும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும்  செய்யும்படி அரசு உயரதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் அறிவுறுத்தி இருக்கிறார். ஆந்திராவிலும் தொடர்ந்து மழை அதிகரிக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் மாவட்டங்களுக்கும், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, ஜகதிஸ்சிங்பூர் மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அரிசியை கொள்முதல் செய்ய வேண்டும்

மாநிலங்களவையில் பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் பிரசன்ன சார்யா பேசுகையில், ‘‘ஒன்றிய அரசானது தெலங்கானாவை போலவே ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. ஒடிசா தான் நாட்டிலேயே அதிகபட்சமாக புழுங்கல் அரிசியை உற்பத்தி செய்கிறது. மாநிலத்தில் தற்போது உபரி புழுங்கல் அரிசி 28 லட்சம் டன் கையிருப்பில் உள்ளது. மேலும், நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், புயலால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும்,’’ என்றார்.

Related Stories: