தமிழகத்தில் ஒரு மருத்துவர் கூட உருவாக கூடாது என ஒன்றிய அரசு நினைக்கிறது: தனிநபர் மசோதா தாக்கலுக்கு பிறகு எம்பி வில்சன் பேட்டி

புதுடெல்லி: ‘தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட மருத்துவராகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு உள்ளது,’ என மாநிலங்களவை திமுக எம்பி வில்சன் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக டெல்லியில் வில்சன் நேற்று அளித்த பேட்டி வருமாறு: தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வு கடந்த 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த தேர்வால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 17 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி கோரி, மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளேன். தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அது ஆளுநரிடம் கிடப்பில் உள்ளது. தமிழகத்தில் ஒருவர் கூட மருத்துவராக உருவாகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு உள்ளது. தேவையற்ற நகம் வளர்வது போல்தான், எந்த விதத்திலும் பயனளிக்காத வகையில் நீட் தேர்வு உள்ளது.

தமிழகம் உட்பட நாட்டின் 4 இடங்களில் உச்ச நீதிமன்ற கிளைகள் அமைப்பது தொடர்பான தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்துள்ளேன். வசதி படைத்தவர்கள் மட்டுமே டெல்லி வந்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் சூழல் உள்ளது. சட்டவிதி 130-யை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே இந்த கிளைகளை அமைக்க உத்தரவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More