மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்கியதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தேர்வு: ஜனாதிபதியிடம் விருதை பெற்றார் அமைச்சர் கீதாஜீவன்

புதுடெல்லி: மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை ஒன்றிய அரசு தேர்வு செய்ததையடுத்து, அதற்கான விருதை தமிழக அமைச்சர் கீதாஜீவன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பெற்றுக் கொண்டார். டெல்லியில் நேற்று ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பாக நடைபெற்ற 2020ம் ஆண்டுக்கான மாற்று திறனாளிகளின் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சமூகநலம், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.

விழாவில் இந்தியாவிலேயே மாற்று திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியமைக்காக தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை அமைச்சர் கீதாஜீவன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுக்கொண்டார். இதையடுத்து நிருபர்களை சந்தித்த கீதாஜீவன் கூறியதில், “ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்று திறனாளி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அவர்களின் தனித்திறமைகளை வெளியே கொண்டு வரும் விதமாக மாநில அரசுகளால் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளின் உரிமையேற்றத்துக்கான தேசிய விருதுகள் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஏ.எம்.வேங்கட கிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஏழுமலை ஆகிய பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும், அதேபோன்று கானாத்தூர் ரெட்டிக்குப்பத்தை சேர்ந்த கே.தினேஷ் (அறிவுசார் குறைபாடு), மேலும் திருச்சி மாவட்டம் மானெஷா தண்டபாணி, சென்னை மந்தவெளியை சார்ந்த செல்வி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேட்டப்பாளையம் டி.பிரபாகரன் ஆகிய குறைபாடு உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் மாற்று திறனாளிகளுக்கான உரிமையேற்றத்தினை ஊக்குவிப்பதில் நாட்டில் முதல் மாநிலம் தமிழகம் என்பது போன்று, மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக தமிழகத்தை பொருத்தமட்டில் மனநோய் மற்று மனவளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த உதவிகளை செய்து வருவது. அதுசார்ந்த தொண்டு நிறுவனங்களை ஊக்குவிப்பது ஆகிவற்றை தமிழகத்தின் தரப்பில் சிறப்பாக செய்யப்பட்டு வரப்படுகிறது. அதேப்போன்று ஆறு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாவட்டம் தோறும் மையங்கள் அமைத்து தருவதில் தமிழகம் சிறந்து விளங்கி வருவதாகக் கூறி இந்த விருது வழங்கப்பட்டது. இதில் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொறுப்பில் தான் இது தற்போது  செயல்பட்டு வருகிறது. தற்போது அவர் இந்த திட்டங்களுக்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

குறிப்பாக தமிழகத்தில் ரைட்ஸ் என்ற புதிய திட்டத்திற்காக ரூ.1072கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மாற்று திறனாளியும் அரசின் பயனை அடையாமல் இருக்கக் கூடாது. அவர்களை கண்டறிந்து மாதாந்திர உதவி, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, உரிமையை நிலை நாட்டுதல், திறன் மற்றும் பயிற்சி அளித்தல் ஆகியவை இந்த திட்டத்தின் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.லால்வேனா உடனிருந்தார்.

Related Stories: