கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளராக கோடியேரி பாலகிருஷ்ணன் மீண்டும் நியமனம்

திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளராக கோடியேரி பாலகிருஷ்ணன் கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவரது மகன் பினீஷ் கோடியேரி போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு நிதியுதவி செய்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து கோடியேரி பாலகிருஷ்ணன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர்.

கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்வதால் பதவியை ராஜினாமா செய்வதாக கோடியேரி பாலகிருஷ்ணன் அறிவித்தார். இது தொடர்பாக கட்சிக்கு அவர் ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதையடுத்து தற்காலிக செயலாளர் பொறுப்பு இடது முன்னணி ஒருங்கிணைப்பாளரான விஜயராகவனுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கோடியேரி பாலகிருஷ்ணன் ஊர் திரும்பினார்.  அவரது மகன் பினீஷ் கோடியேரியும் ஒரு வருட சிறை வாசத்திற்குப் பின்னர் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.   இதனால் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு மீண்டும் மாநில செயலாளர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த சிபிஎம் மாநில செயற்குழு கூட்டத்தில் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு மீண்டும் மாநில செயலாளர் பதவி வழங்க  தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: