15 வயது மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் திருவனந்தபுரம் அருகே  அரசு மருத்துவமனையில் 2 மாணவிகளுக்கு 15  வயதில் போட வேண்டிய தடுப்பூசிக்கு பதிலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 10ம் வகுப்பு  படிக்கும் 2 மாணவிகள் 15 வயதில் போட வேண்டிய தடுப்பூசியை  போடுவதற்காக ஆரியநாடு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஓபி சீட்டை  எடுத்தவர்களுக்கு தடுப்பூசி போடும் இடம் தெரியவில்லை. இதையடுத்து தடுப்பூசி  போடுவதற்கான இடத்தை தேடி அலைந்தனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்களால் அந்த  இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் மருத்துவமனையில்  நடந்த கொரோனா தடுப்பூசி முகாமுக்கு 2 மாணவிகளும் சென்றனர். அங்கிருந்த  நர்ஸ் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டார். சிறிதுநேரம் கழித்து தான்  தடுப்பூசி மாறி செலுத்திய விவரம் தெரியவந்தது. இதனால் ஆஸ்பத்திரியில்  பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து 2 மாணவிகளையும் ஆஸ்பத்திரியில்  அமர்த்தி டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்தனர். உடல் நலகுறைவு எதுவும்  ஏற்படாததால் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரித்து  நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவனந்தபுரம் மாவட்ட மருத்துவ அதிகாரி  தெரிவித்தார்.

இந்தியாவில் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தான்  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஊசி போடுவதற்கு முன்பு ஆதார்  எண், செல்போன் நம்பர் ஆகியவை பரிசோதிக்கப்படும். இது எதையும் செய்யாமல்  அலட்சியமாக 15 வயது பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது  கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: