ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வந்த அதிமுக தொண்டர் அடித்து விரட்டியடிப்பு: கட்சி தலைமை அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வந்த அதிமுக தொண்டர் அடித்து விரட்டப்பட்ட சம்பவம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.அதிமுக உள்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் 3, 4ம் தேதி, (நேற்றும், இன்றும்) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வாங்கி பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று கட்சி தலைமை நேற்று முன்தினம் அறிவித்தது. இதற்கான தேர்தல் வருகிற 7ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஓமப்பொடி பிரசாத் சிங் என்ற அதிமுக தொண்டர் நேற்று பிற்பகல் 12 மணிக்கு விருப்ப மனு வாங்க கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு விருப்ப மனு வழங்க கட்சி நிர்வாகிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க அவர் முயற்சி செய்தார். ஆனால், கட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்து வெளியே விரட்டினர். அவர் வெளியே சென்ற பிறகும், சில அதிமுகவினர் சாலைக்கு சென்று அவரை ஓட ஓட விரட்டி அடித்தனர்.

இதையடுத்து, அந்த பகுதியில் இருந்த வெளியேறிய ஓமப்பொடி பிரசாத் சிங், ராயப்பேட்டை போலீசில் இது குறித்து புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது,‘ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தான் என்னை அடித்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் சூழ்ந்து கொண்டு என்னை தாக்கினர். ஓபிஎஸ், இபிஎஸ் தவிர வேறு யாரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று திட்டமிட்டு கட்சி தலைமை செயல்பட்டு வருகிறது’ என்றார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அடிப்படை உறுப்பினர்களே வாக்களித்து அவர்களை தேர்வு செய்வார்கள் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் கடந்த 1ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், சாதாரண கட்சி தொண்டரை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட விடாமல் அதிமுக கட்சியினரே அடித்து விரட்டிய சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More