மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை என டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 4,300 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் 25ம் தேதிக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர், கொரோனா பரவல் குறைந்ததையடுத்து டாஸ்மாக் கடைகள் பகுதியாக திறக்கப்பட்டு செயல்பட்டது. இதேபோல், ஊரடங்கு அறிவிப்பை பொறுத்து டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டது. அந்தவகையில், கடந்த ஜூலை முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மீண்டும் பழைய நிலைக்கே மாற்றி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எல்.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா பரவலுக்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக 10.5.2021 முதல் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, 5.7.2021 முதல் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை (10 மணி நேரம்) செயல்படும் என அறிவித்தது. இந்தநிலையில், அரசின் வழிகாட்டுதல்களை கவனமுடன் கடைபிடித்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என வழக்கமான நடைமுறைக்கு மாற்றப்படுகிறது. எனவே, அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் இந்த நடைமுறையை கடைபிடித்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் திறக்கப்படும் நேரம் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.  இந்நிலையில், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க  (ஏ.ஐ.டி.யூ.சி) மாநில பொதுச்செயலாளர் தனசேகரன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘மதுக்கடைகளும், மதுக்கூடங்களும் இரவு 10  மணி வரை செயல்படும் போது சமூக விரோதிகள் வழிமறித்து, விற்பனை  பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும், பணியாளர்  பாதுகாப்பு மற்றும் நோய் தொற்று பரவல் நெருக்கடியை கருத்தில் கொண்டு நேர அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: