மகளிர் சுயஉதவிக்குழுக்களின் 2,674 கோடி கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு

சென்னை: கடந்த மார்ச் 31ம் தேதி நிலுவையில் உள்ள தொகையில், அபராத வட்டி மற்றும் இதர செலவினம் தவிர்த்து மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 2674.64 கோடி கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பான, அரசாணையில் கூறியிருப்பதாவது:  கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2021-22க்கான வரவு செலவு திட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கடன் வழங்குவதற்கு ஏதுவாக இச்சங்கங்ளுக்கு பல்வேறு கட்டங்களில் நிதிநிலை வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலித்த அரசு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனில் 2021 மார்ச் 31 அன்றைய தேதியில் உள்ள நிலுவைத்தொகையில், அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் தவிர்த்து, அசல் தொகையான 2459.57 கோடியும் மற்றும் வட்டி தொகையான 215.07 கோடியும் சேர்த்து மொத்தம் 2674.64 கோடியை தள்ளுபடி செய்ய அனுமதி வழங்குகிறது. இதில் முதல்கட்டமாக இந்த நிதியாண்டில் ₹600 கோடி விடுவிக்கவும், மீதமுள்ள தொகை 7% வட்டியுடன் நான்கு ஆண்டுகளில் நிபந்தனைகளுக்குட்பட்டு விடுவிக்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: