விபத்தில் இறந்தவர் போலீசுக்கு தெரியாமல் அடக்கம்: முதியவர் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் இறந்த முதியவர் சடலத்தை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ததால் தாசில்தார் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவடடம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 21ம்தேதி சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த டிராக்டர் மோதியதில் படுகாயம்அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு சென்ற நிலையில் வழியிலேயே அவர் இறந்து விட்டார். ஆனால் போலீசுக்கு தெரியாமல் முதியவர் சடலத்தை உறவினர்கள் அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் பழனிவேலுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர், மினிடெம்போ டிரைவர் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து இரு வாகனங்களையும் பறிமுதல் ெசய்தனர்.

 இதற்கிடையே போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்யப்பட்ட முதியவர் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடல்கூறு ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி தாசில்தார் விஜய்பிரபாகரன் முன்னிலையில் நடந்த பிரேத பரிசோதனையில் வருவாய் ஆய்வாளர் பாலு, கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முருகசேன், வரஞ்சலம் தனிப்பிரிவு தலைமை காவலர் சேட்டு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.  புதுவை கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுனில் சுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதியவர் சடலத்தை அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

இதில் முதியவர் விபத்தில் அடிபட்டு இறந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த சடலம் அதே இடத்திலேயே புதைக்கப்பட்டது. விபத்தில் பலியான முதியவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 15 வருடங்களாக அசகளத்தூர் பகுதியில் பொதுமக்களிடம் உணவு வாங்கி உண்டு அங்கேயே வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

More