லண்டனில் வரும் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கொண்டாடப்படும்: லண்டன் நகர பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பிரிட்டன்: லண்டனில் தமிழ் மொழியையும், கலைகளையும் கொண்டாட வழிவகை செய்யும் திட்டத்திற்கு மாநகர நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரிட்டனில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்னணி சுகாதார வல்லுநர்கள் என சுமார் 15,000 தமிழர்கள் பணிபுரிகின்றனர். இது தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆசிரியர்களாகவும், ஆசிரியர் உதவியாளர்களாகவும் பிரிட்டன் பாடசாலைகளில் பணியாற்றுகின்றனர். இதன் மூலம் பிரிட்டனில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்கு தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்நிலையில், லண்டனில் வரும் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி ஆண்டுதோறும் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கடைபிடிக்கப்படும் என லண்டன் மாநகர நிர்வாகம் அறிவித்துள்ளது. லண்டன் நகர பேரவையின் கன்செர்வேட்டிவ் உறுப்பினர் நிக்ரோ ஜெர்ஸ், தமிழ் மரபுரிமை மாதத்திற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எனவே வரும் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக லண்டனில் கடைபிடிக்கப்பட்டு தமிழ்மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றை கொண்டாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஏற்கனவே கனடாவில் இதேபோல தமிழ் மரபுரிமை மாதம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: