சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் மாவட்ட திட்ட இயக்குநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்..!!

சென்னை: சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் அனைத்து மாவட்டங்களில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட திட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுடன், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ம. பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தின் கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தீனதயாள் கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், திட்டங்களை செயல்படுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் இணைப்புகள், திறன் பயிற்சிகள், வேலைவாய்ப்புகள் போன்றவை குறித்தும், மாவட்டம் வாரியாக அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும் அனைத்து மாவட்ட திட்ட இயக்குநர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்ததாவது, ``மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக ஆக்கப்பூர்வமான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்கள் முழுவதும் சுய உதவிக் குழுக்களை சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும் எனவும் பிற துறைகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, அத்துறைகளின் மூலம் சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற வேண்டும் எனவும் அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் எனவும் சிறு தொழிலில் ஈடுபட்டுள்ள சுய உதவிக் குழுக்கள்  மேலும் ஊக்கத்துடன் செயல்பட்டு, பெரிய அளவிலான தொழில்களை மேற்கொள்ளும் அளவிற்கு உயர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கூடுதல் இயக்குநர்கள், அனைத்து மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: