க.காதலியின் கடை அபகரிப்பு: போலீஸ் ஏட்டு மீது வழக்கு

கரூர்: கள்ளக்காதலியின் கடையை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்த ஏட்டு மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி தண்டலைபுத்தூரை சேர்ந்த செல்வம் மனைவி சுகிதா(36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுகிதா, கரூர் மாவட்டம் குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவில் திருச்சியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இதற்கு முன்பணமாக  ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கரூரில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் காந்திசெல்வம்(38) என்பவருடன் சுகிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் பழனியில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சுகிதாவின் கணவர் செல்வம் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். பின்னர் சுகிதாவும், காந்திசெல்வமும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கடை திறக்காததால் வாடகையை சுகிதா, காந்திசெல்வம் மூலம் கணேசனுக்கு கொடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுகிதா கடையில் இருக்கும்போது, அங்கு வந்த ஏட்டு காந்திசெல்வம், அவரது மனைவி சபிதா(37), முசிறியை சேர்ந்த லோகநாதன், கோவிந்தராஜ் ஆகியோர் கடைக்குள் சென்று சுகிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் சுகிதாவுக்கு தெரியாமல் அவரது பெயரில் இருந்த கடையை  உரிமையாளர் கணேசனுடன் சேர்ந்து மோசடியாக ஆவணங்கள் தயார் செய்து சுகிதா கையெழுத்தை போலியாக போட்டு அந்த கடையை காந்திசெல்வம் தனது பெயருக்கு மாற்றி உள்ளார்.

தகவல் தெரிந்து கடைக்கு சென்ற சுகிதா, தான் முதலீடாக செலுத்திய ரூ.20 லட்சத்தை தரும்படி காந்திசெல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தராமல் மோசடி செய்ததோடு, கடைக்கு வந்தால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகிதா குளித்தலை போலீசில் நேற்று புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், போலீஸ் ஏட்டு காந்திசெல்வம், அவரது மனைவி சபிதா, லோகநாதன், கோவிந்தராஜ், பில்டிங் உரிமையாளர் கணேசன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More