ஊரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் 10 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டது எதனால்?: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் வீட்டிற்குள் 10 அடி பள்ளம் ஏற்பட்ட நிலையில், அங்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ஊரப்பாக்கம் ஜெகதீஸ் நகரில் சில தினங்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் திடீரென்று 8 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் வீட்டில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 7 குடும்பங்களும் வீடுகளை காலி செய்தனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியவர்கள் ஊரப்பாக்கம் ஜெகதீஸ் நகரில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

பிறகு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 7 வீடுகளில் இருந்தோரை பாதுகாப்புடன் தங்க வைத்திருப்பதாகவும், தண்ணீர் செல்வதற்கு இருந்த தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனிடையே சிறு மழை பெய்தாலே அருள் நகர், ஜெகதீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே அந்த பகுதி கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் தண்ணீர் தேங்கும் பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் தமிழக முதலமைச்சர் இப்பிரச்னையில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பது ஊர்ப்பக்கம் மக்களின் கோரிக்கையாகும்.

Related Stories: