ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தூண்டுதலா?: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் பெற வந்த அதிமுக தொண்டர் தாக்கப்பட்டு விரட்டியடிப்பு..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் வாங்க வந்த தொண்டர் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதால் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவை இனி இரட்டை தலைமையே வழிநடத்தும் என்பதை உறுதி செய்யும் வகையில் கட்சியின் சட்ட விதிகளில் கடந்த புதன் அன்று மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று முதல் இரண்டு தினங்களுக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய விண்ணப்பம் பெற அதிமுக மூத்த தொண்டர் ஓமபொடி பிரசாத் சிங் என்பவர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அவருக்கு விண்ணப்பம் கொடுக்க மறுக்கப்பட்டது. இதுகுறித்து ஓமபொடி பிரசாத் சிங், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, அவர் மீது அங்கிருந்த சிலர் தாக்குதல் நடத்தி வெளியே இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் கட்சியின் ஒவ்வொரு  உறுப்பினரும் போட்டியிடலாம் என்று அறிவித்துவிட்டு விண்ணப்பம் தர மறுப்பது ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இருவரின் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று ஓமபொடி பிரசாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரிலேயே தன்மீது தாக்குதல் நடைபெற்றதாக ஓமபொடி பிரசாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் 7ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுதினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று அதிமுக கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் டிசம்பர் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: