திருப்பதி மலைப்பாதையை முழுமையாக சீரமைக்க 3 மாதங்கள் ஆகும்: ஐஐடி பேராசிரியர் தகவல்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்த இடத்தை முழுமையாக சீரமைக்க 2, 3 மாதங்கள் ஆகும் என்று ஆய்வு செய்த ஐஐடி பேராசிரியர் தெரிவித்தார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் 15 கிமீ தொலைவில் நேற்றுமுன்தினம் பாறைகள் சரிந்து விழுந்து 4 இடங்களில் சாலைகள் சேதம் அடைந்தது. அந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. முதலாவது மலைபாதையிலேயே பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை என மாற்றம் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாறைகள் விழுந்த இடத்தை டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த ஐஐடி பேராசிரியர்கள் குழுவினர் தேவஸ்தான பொறியாளர்களுடன் இணைந்து நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் டெல்லி ஐஐடி பேராசிரியர் கே.எஸ்.ராவ் நிருபர்களிடம் கூறியதாவது: மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்ததில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக 30 முதல் 40 டன் எடை கொண்ட பாறைகள் சரிந்து விழுந்துள்ளது. இதனால் சாலை சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பாறைகள் அகற்றப்பட்டு மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் 2, 3 மாதங்களில் முடிவு பெறும்.

மலைப்பாதையின் 22 கிலோ மீட்டரில் எந்தெந்த இடங்களில் பாறைகள் சரிந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. 12 இடங்களில் பாறைகள் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அடுத்த மழை காலத்திற்குள் தீர்வு காணும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும். 3வது மலைப்பாதை அமைக்க வேண்டும் என்ற முடிவை வரவேற்கிறோம். இதுபோன்ற இயற்கை பேரிடர் காலத்தில் 3வது மலைப்பாதை இருப்பது அவசியமாக இருக்கும். இந்த மலை 5 ஆயிரம் பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மலை. மேலும், கடின மண் சேர்ந்த மலையாக உள்ளது.

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும், மீண்டும் பாறைகள் சரிந்து விழாத வகையில் உலகில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வகையில் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்து கட்டப்படும். வெள்ள நீர் செல்வதற்கான கால்வாய் வசதிகள் தற்போது குறைவாக உள்ளது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே அதற்கேற்றார்போல் உரிய திட்டம் வகுத்து தேவஸ்தானத்திடம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில் இந்த பாதையில் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிந்து 2 அல்லது 3 நாளில் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிகிறது.

Related Stories:

More