கிணற்றில் சிக்கிய யானை மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கிணற்றில் சிக்கிய யானையை பொது மக்கள் மீட்டனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே பாலா பகுதியை சேர்ந்த ஒருவர் கல்யாணி என்ற யானையை வளர்த்து வருகிறார். அவர் யானையை தடி பிடிப்பதற்காக (விறகை வெட்டி யானை மீது ஏற்றி கொண்டு வருதல்) வாடகைக்கு விடுவது வழக்கம். நேற்று கோட்டயம் அருகே உள்ள பனச்சிக்காடு பகுதியில் தடி பிடிப்பதற்காக பாகன்கள் யானையை கொண்டு சென்றனர். தடி பிடித்து கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ஒரு லாரி வந்துள்ளது.

லாரியின் சத்தம் கேட்டு யானை திடீரென மிரண்டு ஓட்டம் பிடித்தது. பாகன்கள் அதை பின்தொடர்ந்து சென்றனர். யானை நிற்காமல் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடியது.  அங்கு ஒரு வீட்டின் கேட் வழியாக ஓடிய யானை அங்கிருந்த கிணற்றை தாண்டி குதிக்க முயன்றது. அப்போது யானையின் கால் கிணற்றில் சிக்கிக்கொண்டது. இதனால் யானையால் நகர முடியவில்லை. சுமார் 50 அடி ஆழம் உடைய அந்த கிணற்றுக்குள் யானை விழுந்துவிடாமல் காப்பாற்ற முயற்சி செய்தனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை பத்திரமாக மீட்கப்பட்டது. இதில் யானையின் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More