இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 927 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி-அமைச்சர் வழங்கினார்

வாலாஜா : இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 927 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். வடகிழக்கு மழையினால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணங்களை வழங்கி வருகிறது. அதன்படி வாலாஜா அடுத்த பாலாறு அணைக்கட்டு பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கும்விழா நேற்றுமுன்தினம் நடந்தது.  

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முகமதுஅஸ்லாம் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது கொரோனா நோய்தொற்று உச்சகட்டத்தில் இருந்தது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.

தொடர்ந்து கனமழை, வெள்ளம் இவற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களோடு மக்களாக சென்று நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேபோல் இலங்கை தமிழர்களுக்கு உரியமரியாதை கிடைத்திடவும், அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்திடவும் கடந்த திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

மீண்டும் ஆட்சி வந்தவுடன் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கக்கூடிய நிவாரணம் இலங்கை தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி காஸ்அடுப்பு, இங்கு வசிக்கும் 927 பயனாளிகளுக்கும் நிதியுதவி, சமையல் பாத்திரங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் வீடுகட்டுவதற்கும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.

விரைவில் அந்த பணியும் நடைபெறும். இலங்கை தமிழர்கள் வாழ்வில் திமுக ஆட்சி பொற்காலமாகும் இவ்வாறு அவர் பேசினார். இதில் ராணிப்பேட்டை ஆர்டிஓ பூங்கொடி, மாவட்ட ஊராட்சிகுழு துணைத்தலைவர் நாகராஜ், வாலாஜா ஒன்றியகுழு தலைவர் சேஷாவெங்கட், மாவட்ட கவுன்சிலர் மாலதி கணேசன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் அஞ்சலை ராஜபாண்டியன், தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: