திருப்பத்தூர் அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடசமுத்திரம், அத்திமாகுலபள்ளி, விநாயகபுரம், ராளகொத்தூர், ரங்காபுரம், பாட்டூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இன்று அதிகாலை சுமார் 5.10 மணியளவில் அத்திமாகுலபல்லி, விநாயகபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் போன்ற அதிர்வுடன் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் ஒரு சிலர் வெடிச்சத்தத்தை கேட்டும், லேசான நில நடுக்கத்தை உணர்ந்தும் திடுக்கிட்டு எழுந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

மீண்டும் அதிர்வு ஏற்படாததால் பின்னர் வீடுகளுக்கு திரும்பினர்.இதேபோல் கடந்த 28ம்தேதி ஆம்பூர் அரங்கல்துருகம் அருகே உள்ள காரப்பட்டு காப்புக்காட்டை ஒட்டிய கிராமங்களிலும் மறுநாள் 29ம்தேதி அதிகாலை குடியாத்தம் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வானது சின்னாங்குப்பம் தொடங்கி குடியாத்தம் மீனூர் மலை வரை தொடர்ந்தது. இதன்காரணமாக சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. காரப்பட்டு காப்பு காட்டில் ரிக்டர் அளவில் 3.16 என நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் ஏற்படும் முன்பாக அப்பகுதியில் இதேபோன்று வெடிச்சத்தம் மற்றும் லேசான நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் தற்போது அத்திமாகுலப்பள்ளி, விநாயகபுரம் ஆகிய இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: