உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் வேளாண்மைதுறை சார்பில் பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் பண்ணை பள்ளி நடைபெற்றது.

இதில் விவசாயிகள் தங்களது நெல்வயல்களில் நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் ஆகியவற்றை கண்டறிந்து தீமை செய்யும் பூச்சிகள் பொருளாதார சேத நிலைக்கு கூடுதலாக காணப்படும் பட்சத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள பண்ணை பள்ளியில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சிக்கு முத்துப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட மாநிலத் திட்ட வேளாண்மை துணை இயக்குனர் உத்திராபதி மற்றும் மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நெல்வயல்களில் காணப்படும் தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர்.

மேலும் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ஜெகதீசன் கலந்துகொண்டு தீமை செய்யும் பூச்சிகளான குருத்துப் பூச்சி, இலை சுருட்டு புழு, புகையான், ஆனைக் கொம்பன் போன்ற பூச்சிகளை இனம் காணவும், அவைகளுக்கு எதிரியாக காணப்படும் சிலந்தி, பொறி வண்டு, தட்டான், ஊசித்தட்டான் போன்றவற்றை இனம் காணவும் பயிற்சிகள் அளித்து நன்மை செய்யும் பூச்சிகளை விட தீமை செய்யும் பூச்சிகள் பொருளாதார சேதநிலைக்கு அதிகமாக இருக்கும் போது மட்டுமே ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளிக்க அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் விவசாயிகள் தேவையில்லாமல் தங்களது வயல்களில் பூச்சி மருந்தை தெளித்து செலவினை அதிகரித்துக் கொள்ளாமலும் தேவைப்படும் பூச்சி மருந்துகளை வேளாண் துறை அலுவலர்களின் அறிவுரைகளைப் பெற்று வாங்கி பயன்படுத்தவும் விவசாயிகளை கேட்டுக்கொண்டார். முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி கூறுகையில்: இந்த பண்ணை பள்ளியானது ஆறு வாரங்களுக்கு குறிப்பிட்ட கிழமைகளில் நடைபெறும் ஒவ்வொரு பயிற்சி பள்ளியிலும் விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பில் முத்துப்பேட்டை துணை வேளாண்மை அலுவலர் காத்தையன், உதவி வேளாண்மை அலுவலர்கள் கதிர், கதிரேசன், ரம்யா ஆகியோர்கள் உடன் இருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசேரன் பண்ணை பள்ளியினை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து முடிவில் நன்றி கூறினார்.

Related Stories: