விழுப்புரம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் வெண்டை செடிகள் நாசம்-விவசாயிகள் கவலை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் வெண்டை பயிரிட்டு வந்த விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி அனைத்து செடிகளும் நாசமாகி விட்டன. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெண்டை விதையிட்டு நன்கு செடிகள் வளர்ந்து பூ பூத்து காய்கள் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்தன. இங்கிருந்து சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் வெண்டை ஏற்றுமதி செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை எப்போதும் போல் இல்லாமல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அதிகளவில் பெய்ததால் விவசாய நிலங்கள் அனைத்தும் மழைநீரால் வெள்ளக்காடாக மாறியது. இதனால் அத்தியூர் திருவாதி பகுதியில் இருந்த அனைத்து வெண்டை செடிகளும் முற்றிலும் நாசமாயின. சில விவசாயிகள் அழுகிய நிலையில் இருந்த வெண்டை செடிகளை வேறொன்றும் செய்யமுடியாத நிலையில் வேரோடு பிடுங்கி அகற்றியுள்ளனர்.

தற்போது மழையினால் காய்கறி வரத்து குறைந்து உள்ள நிலையில் வெண்டைக்காய் கிலோ ரூ.85 வரை விற்பனையாகி வருகிறது. ஆனால், இந்தப் பகுதியில் அறுவடை செய்து விற்பனைக்கு செல்ல வேண்டிய நேரத்தில் நிலம் முழுவதும் நீரில் மூழ்கி வெண்டைக்காய் செடிகள் அழுகியதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: