ஓசூர் பகுதியில் தொடர் மழையால் கொத்தமல்லி குத்தகை தொகை அதிகரிப்பு-ஏக்கருக்கு ₹3 லட்சம் நிர்ணயம்

ஓசூர் : ஓசூர் பகுதியில் தொடர் மழை எதிரொலியாக கொத்தமல்லி குத்தகை தொகை அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு ₹3 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி, பீன்ஸ், பீட்ருட், கேரட் மற்றும் கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஒரு மாத பயிரான கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை வகைகளையும் ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்துள்ளனர். தொடர் மழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. அறுவடை செய்த ஒரே நாளிலேயே அழுகும் நிலை காணப்பட்டதால், சந்தைக்கு வரத்தும் சரிந்தது.

இதேபோல், சந்தைக்கு கீரை வகைகளின் வரத்தும் அடியோடு சரிந்தது. குறிப்பாக கொத்தமல்லி மகசூல் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, சந்தைக்கு வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதனால், விலை அதிகரித்துள்ளதால் தோட்ட குத்தகை தொகையும் 3 மடங்கு அதிகரித்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘உணவு பதார்த்தங்களில் கொத்தமல்லியின் தேவை அதிகரித்துள்ளதால், நாளுக்கு நாள் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

ஒரு மாத பயிரான கொத்தமல்லியை அறுவடை செய்து, கட்டுகளாக கட்டி உடனுக்குடன் அருகில் உள்ள பெங்களூரு சந்தை மற்றும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மொத்தமாக வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர். இதற்காக கொத்தமல்லி தோட்டங்களை மொத்தமாக குத்தகை எடுக்கின்றனர். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு ₹1 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. தொடர் மழையால் கொத்தமல்லி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தொடர்ந்து முகூர்த்த தினங்கள் வருவதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால், கொத்தமல்லி தோட்டத்திற்கான குத்தகை தொகை அதிகரித்து, ஏக்கருக்கு ₹3 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுகிறது,’ என்றனர்.

Related Stories: