ஒரு வாரத்திற்கு பின் வெள்ளம் தணிந்ததால் தாமிரபரணியில் பொதுமக்கள் நீராடினர்

நெல்லை : நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஒரு வாரத்திற்கு பின் வெள்ளம் தணிந்ததால் குறுக்குத்துறை கல் மண்டப பகுதியில் பொதுமக்கள்  நீராடினர். நெல்லை  மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை  கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  கொட்டியது. இந்தாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த நவம்பர்  மாதத்தில்  மாவட்டம் முழுவதும் 3,704.30 மி.மீ. மழை பெய்துள்ளது.  இதனால் தாமிரபரணி  ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்தது.

சில நாட்கள் 20 ஆயிரம்  கனஅடிக்கு மேல் வெள்ளம் பாய்ந்தது. இதன் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில்  பெரும்பாலான நாட்கள் தாமிரபரணி ஆற்றில்  பொதுமக்கள் நீராடவும்,  செல்பி  எடுக்கவும், வேடிக்கை பார்க்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.இந்நிலையில்  கடந்த 2 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்தது.  இதுபோல்  அணைப்பகுதியிலும் மழை இல்லை. இதன் காரணமாக கடந்த நவ.30 முதல் அணைகளில்  இருந்து தாமிரபரணியில்  திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக  குறைக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தணிந்தது.  நேற்று காலை நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதி தாமிரபரணி ஆற்றில் கோயில்  கல்மண்டப பகுதியில் படித்துறையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

இதையடுத்து  பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி மகிழ்ந்தனர்.  வெள்ளப் பெருக்கு  காரணமாக ஆற்றில் அடித்து வரப்பட்ட மரக்கிளை, செடி, கொப்பு மற்றும்  பிறகழிவு குப்பைகள்  குறுக்குதுறை முருகன்கோயில் அருகேயுள்ள  கல்மண்டப தூண்களில் சிக்கி காணப்படுகிறது.  இதுபோல் கோயில் உள் பகுதியிலும்  தண்ணீர் முழுமையாக  வடியாமல் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

Related Stories:

More