கடப்பா, சித்தூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஆய்வு-பொதுமக்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்

திருமலை : கடப்பா, சித்தூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். ஆந்திர மாநிலத்தில் கடந்த 12 நாட்களாக தொடர் கனமழை பெய்தது. இதில், கடப்பா, சித்தூர், நெல்லூர் மாவட்டத்தில் பல பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளை நேரில் ஆய்வு ெசய்ய முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்து 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

இதன்ஒரு பகுதியாக நேற்று காலை கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் கடப்பா மாவட்ட  பொறுப்பு அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ், எம்பி மிதுன்  ஆகியோருடன் புறப்பட்டு கடப்பா விமான நிலையத்திற்கு வந்தார்.

விமான நிலையத்தில் முதல்வரை கலெக்டர் விஜய ராமராஜூ, டிஐஜி வெங்கட்ராமி, சட்ட பேரவை துணைத் தலைவர் ஜாக்கியாகான், எம்எல்ஏக்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து ெஹலிகாப்டர் மூலம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடப்பா மாவட்டம், அன்னமய்ய சாகர் பகுதியை பார்வையிட்டார். அப்போது, மழை ெவள்ளத்தால் வீடு இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், ராஜாம்பேட்டை மண்டலம், புல்புதூர், மேல்மண்டப்பள்ளியில்  அன்னமய்ய சாகர் அணை உடைந்து வெளியேறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சேத விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும், உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்களை காண்பித்து அதிகாரிகள் சேத விவரங்களை முதல்வரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் சித்தூர் மாவட்டம், ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றார். தொடர்ந்து, வேத்தல்ல செருவு (யானதி காலனி, பாப்பா நாயுடுபேட்டை,  பாடிபேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

மேலும், மழையால், பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்தார். பின்னர், திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு கலெக்டர் ஹரிநாராயணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, திருப்பதியில் தங்கியுள்ள முதல்வர் ஜெகன் மோகன் இன்று திருப்பதி கிருஷ்ணா நகர், ஆட்டோ நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறார். அதன்பின்னர், நெல்லூர் மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து கன்னவரம் செல்கிறார்.

Related Stories: