ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் கி.பி. 15ம் நூற்றாண்டு நாயக்கர் கால நடுகல் கண்டெடுப்பு

ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம்,  ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  இடைநிலை  ஆசிரியராக உள்ள சரவணன், அவர் வேலை செய்து வரும் பள்ளி அருகில் பழங்கால கற்சிலைகள் இருப்பதாக தெரிவித்த தகவலின்பேரில், சம்புவராயர் ஆய்வு மைய முனைவர் அ.அமுல்ராஜ் மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் ஆகியோர்  நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பூசிமலைக்குப்பம் விஏஓ  அலுவலகம் எதிரில் 2 நடுகற்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை  ஆய்வு செய்தனர். அவை இரண்டும்  கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால நடுகல் என்பதும், வேட்டை மற்றும் போரில் இறந்த வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்டது எனவும் உறுதிசெய்தனர்.  இதுகுறித்து, முனைவர் அ. அமுல்ராஜ் கூறியதாவது:

 போரில் வீரம் காட்டி இறந்த வீரர்களுக்கும் வேட்டையில் உயிர்நீத்த மறவர்களுக்கும் நடுகல் எடுத்து வணங்குவது  பழந்தமிழர் மரபு.

இம்மரபு நாயக்கர் காலம் வரை நின்று நீடித்தது. பூசிமலைக்குப்பம் கிராமத்தில் விஏஓ அலுவலகம் எதிரில் 2 நடுகற்களும், பொதுமக்களின் வழிபாட்டில் இன்றளவும் உள்ளது. இதுகுறித்து, பூசிமலைக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ரத்தினத்திடம் கேட்டதற்கு, இந்த நடுக்கற்கல் அம்பு வீரன் கல். எங்களூரில் ஆண்குழந்தை பிறந்தால் இந்த வீரர்கள் சிலைக்கு முன் கொண்டுவந்து படுக்கவைத்து குழந்தைகளும் வீரர்களாக  வளர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா நாட்களில் உள்ளூர் இளைஞர்கள் இந்த வீரர்களை வணங்கும் மரபு இன்றுவரையும் உள்ளதாகவும், ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இவைகள் பழந்தமிழர் வழிபாட்டின் எச்சங்களாகும். இதில் 2 நடுகற்களில் வேட்டையில் உயிர்நீத்த வீரன் ஒருவனுக்காக வைக்கப்பட்ட நடுகல் ஆகும். சுமார் 2 அடி அகலம் 3 அடி உயரம் கொண்ட பலகைக் கல்லில் வீரன் ஒருவன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தலையில் வலதுபுறமாக பெரிய கொண்டை காணப்படுகிறது.  காதில் வட்டமான பூ போன்ற அணிகலன் மற்றும் கழுத்தில்  கழுத்தணி  காட்டப்பட்டுள்ளது.

அகண்ட கண்கள், முறுக்கிய மீசையுடன் காணப்படும் வீரனின் கைகளில் முன்கை வளை, தோள் வளை உள்ளது. இடது கையில் வில்லைத் தாங்கியுள்ள வீரன்  வலது கையில் அம்மை இழுத்துவிடும் காட்சி மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருப்பது இந்நடுகல்லின் சிறப்பாகக் கருதலாம். அதே இடத்தில் வலதுபுறம், நிறுத்திவைக்கப்பட்டுள்ள  மற்றொரு நடுகல்,   சதிகல் வகையைச் சார்ந்தது ஆகும்.  போரில் வீரமரணம் அடைந்த வீரனுடன் அவனது மனைவி உடன்கட்டை என்னும் சதி ஏறியதன் பொருட்டு வைக்கப்பட்டுள்ளதுதான் இந்த நடுகலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.  வரலாற்று ஆய்வாளர்  ஆர். விஜயன்  கூறுகையில், ‘பூசிமலைக்குப்பத்தில் ஊருக்கு மேற்கில் உள்ள  அரண்மனை ஜாகீர்களின் வரலாற்றை இன்றளவும் பறைசாற்றியபடி உள்ளது.  எனவே, நாயக்கர் காலத்தில்  இறந்த போர்வீரர்களின் நினைவாக  எடுக்கப்பட்ட நடுகல் என இதனைக் கருதமுடிகிறது. அத்துடன் இப்பகுதியில்  நடுகல் கண்டறியப்படுவது, இதுவே முதன்முறையாகும்’ என்றார்.

Related Stories:

More