திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் ஆற்றுநீரை உள்வாங்கும் அதிசய கிணறு சிறப்பு குழுவினர் தீவிர கள ஆய்வு

திசையன்விளை : திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் நம்பியாற்று தண்ணீரை உள்வாங்கி கொண்டிருக்கும் அதிசய கிணற்றை சிறப்பு குழுவினர் பார்வையிட்டு தீவிர கள ஆய்வு செய்தனர்.

நெல்லை மாவட்டம் ஆயன்குளத்தில் தட்சணமாற நாடார் சங்க செயலாளர் சண்முகவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் கடந்த 7 நாட்களாக விநாடிக்கு 500 கன அடி ஆற்று தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

எனினும் இந்த கிணறு நிரம்பவில்லை. இந்த கிணற்றிற்கு செல்லும் தண்ணீரால் சுமார் 20 கிமீ சுற்றளவுக்கு உள்ள கிணறு மற்றும் போர்வெல்லில் நீர்மட்டம் உயர்வதாக நம்பப்படுகிறது. மேலும் கடற்கரையோரம் உள்ள ஊர்களின் கிணறுகளின் உப்பு தண்ணீர் நல்ல தண்ணீராக மாறுவதாகவும் கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி விவசாயிகள் இந்த அதிசய கிணற்றிற்குள் தண்ணீர் விட வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த ஆண்டு அதிக மழை காரணமாக நம்பியாறு அணை நிரம்பியது. அதிலிருந்து பல்வேறு குளங்களுக்கு சென்று கொண்டிருக்கும் தண்ணீரில் ஆயன்குளம் படுகை நிரம்பியவுடன் தனிக்கால்வாய் மூலம் இந்த கிணற்றுக்குள் தண்ணீர் விடப்படுகிறது. இதனை தமிழக சபாநாயகர் அப்பாவு, நெல்லை கலெக்டர் விஷ்ணு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து ஆய்வு செய்ய அரசுக்கு பரிந்துரைத்தனர்.

அதன்பேரில் நேற்று சென்னை ஐஐடி பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் கொண்ட குழுவினரும் சேர்ந்து அதிசய கிணற்றை சுற்றி சுமார் 3 கிமீ சுற்றளவில் உள்ள கிணறுகளை செயற்கைகோள் படங்கள் மூலம் ஆய்வு செய்தனர். கிணறுகளில் உள்ள தண்ணீரை ஆய்வுக்காக எடுத்தனர். இதன் மூலம் அதிசய கிணற்றில் விடப்படும் தண்ணீர் அருகிலுள்ள கிணற்றிற்குள் செல்கிறதா? என்று ஆய்வு செய்ய உள்ளதாக தெரிகிறது. அவர்களுடன் திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார் உடனிருந்தார்.

ஆய்வு பணிக்காக தன்னார்வலர்களாக அரசூர் பூச்சிக்காடு ஜெயந்திநாதர் மரைன் கல்லூரி மாணவர்கள் 16 பேர் உதவி செய்தனர். அவர்களுடன் கல்லூரி விடுதி காப்பாளர் பால

கிருஷ்ணன், மக்கள் தொடர்பு அதிகாரி பிரின்ஸ் பிரேம் குமார் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு பணி இன்றும் நடைபெற உள்ளது.

Related Stories: