சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவால் 4 மாவட்டங்களில் வெல்ல ஆலைகள் கணக்கெடுப்பு-கலப்படத்தை தடுக்க நடவடிக்கை

சேலம், : வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் ஆலைகளில் கலப்படத்தை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து சேலம் உள்பட 4 மாவட்டங்களில் வெல்லம் ஆலைகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள்  தீவிரமாக நடந்து வருகிறது.

 உணவுக்கலப்படம் என்பது ஒரு பொருளில் அதேபோன்ற போலிப்பொருளை எளிதில் பிரிக்க  முடியாதவாறு கலப்பதாகும். கலப்படம் பொருளின் தரத்தை குறைப்பதோடு, நுகர்வோருக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உணவுப்பொருளில் கலப்படம் இல்லாத பொருட்கள் என்றால் அதை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு உணவுப்பொருளில் கலப்படம் நிறைந்துள்ளது.

உதாரணத்திற்கு அரிசியில் கல், சலவை கற்கள், மண் உருண்டைகள், உளுந்தில் கல், மண், தவிடு, டீத்தூளில் புளியங்கொட்டைத்தூள், பழைய டீத்தூள், தேனில் வெல்லப்பாகு, சர்க்கரைப்பாகு, நெய்யில் வனஸ்பதி, மிருகக்கொழுப்பு, மசாலா பொருட்களில் களிமண் உருண்டைகள், செங்கல்பொடி, துவரையில் கேசரி பருப்பு, மிளகில் பப்பாளி விதை என்று பல பொருட்களிலும் கலப்படம் செய்து விற்கப்படுகிறது.

உணவுப்பொருட்களுடன் கலப்படம் கல், மண் ஆகியவை குடல் பகுதியை அடைத்து வலி மற்றும் உடல் உபாதையை ஏற்படுத்துகிறது. சேர்க்கக்கூடாத வண்ணம் மற்றும் சுவைக்குரிய பொருட்களை சேர்ப்பதால் புற்றுநோய் ஏற்படும். சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யும்போது வாயுத்ெதால்லை, காமாலை, ஈரல் நோய்கள் ஏற்படும். மசாலா பொருட்களில் கலப்படம் செய்யும்போது கண்பார்வை மந்தம், வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இந்நிலையில் வெல்லம் தயாரிப்பில் கரும்புச்சாறுக்கு பதிலாக சர்க்கரை அதிகளவில் கலந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், மேலும் ரசாயனம், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட நிறமூட்டிகள் சேர்ப்பதாகவும் சமீப காலமாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கருப்பட்டி, வெல்லம், அச்சுவெல்லம், நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் ஆலைகளில் கலப்படத்தை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் 60 சதவீதம் கரும்பு சர்க்கரை ஆலைகளுக்கும், 40 சதவீதம் வெல்லம் உற்பத்தி செய்யப்படும் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. ஆலைகளில் கரும்புச்சாறில் இருந்து வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச்சர்க்கரை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, செம்மாண்டப்பட்டி, மேச்சேரி, கமாலாபுரம், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெல்லம் உற்பத்தி செய்யப்படும் ஆலைகள் உள்ளன.

அதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கில் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு பல நூறு டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெல்லம் என்றால் அவை முற்றிலும் கரும்புசாறில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது. அனுமதிக்கப்பட்ட நிறம் சேர்க்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டாக வெல்லம் உற்பத்தியில் கலப்படம் அதிகளவில் சேர்க்கப்படுகிறது.

கரும்புச்சாறுக்கு பதில் சர்க்கரையும், ரசாயனமும், நிறமூட்டிகளும் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. இதுபோன்ற கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. கலப்படத்தை தடுக்க அரசும், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் முடிவு எடுத்துள்ளனர். அதாவது வெல்லம் உற்பத்தி செய்யப்படும் ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தி, உற்பத்தியை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது சம்பந்தமாக விரைவில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலெக்டர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், வெல்லம் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கலந்து கொள்வார்கள். அந்த கூட்டத்தில் ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து விவாதிக்கப்படும். 4மாவட்டங்களிலும் எத்தனை வெல்லம் ஆலைகள் உள்ளது என்று கணக்கு எடுத்து வருகிறோம். இந்த உத்தரவுக்கு பிறகு இன்று (நேற்று) முதல் வெல்லம் ஆலைகளில் மாதிரிகள் சேகரித்து வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

More