துருக்கியில் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு பணவீக்கம்!: மலிவு விலை ரொட்டி துண்டுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்..!!

துருக்கி: மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான துருக்கியில் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு அகல பாதாளத்துக்கு சென்றுள்ளது. இதனால் ரொட்டி துண்டு வாங்க கூட வரிசையில் நிற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். துருக்கி நாட்டின் நாணயமான துருக்கி லிராவின் மதிப்பு டாலர் மற்றும் யூரோவிற்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் தாறுமாறாக அதிகரித்து சாதாரண ரொட்டி துண்டின் விலை கூட பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு டாலருக்கு எதிரான துருக்கிஸ்  லிராவின் மதிப்பு 7 ஆக இருந்த நிலையில், தற்போது 13 லிராவாக குறைந்துள்ளது.

அதாவது ஒரு அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளை வாங்க 13 துருக்கிஸ் லிராவை தர வேண்டும். இதனால் சலுகை விலையில் கிடைக்கும் ரொட்டி துண்டுக்கு கூட மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். துருக்கியில் பணவீக்க விகிதம் 20 சதவீதம் என்று அரசு கூறினாலும் 50 சதவீதம் அதிகரித்துவிட்டதாக தனியார் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. துருக்கி நாணயத்தின் மதிப்பு வீழ்ந்ததற்கு அதிபரின் அர்த்தமற்ற வட்டி குறைப்பு நடவடிக்கையே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதேபோல் பாலஸ்தின அரசும் கடுமையான பணவீக்கத்தால் தனது ஊழியர்களுக்கு மாத சம்பளம் தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

More