சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவிக்கு கீதா கோபிநாத் நியமனம்: இந்தியர்கள் பெருமிதம்

நியூயார்க்: சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்படவுள்ளார். தற்போதைய துணை நிர்வாக இயக்குனரான ஜெப்ரி, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். இதை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத், அவருடைய பதவிக்கு வரவுள்ளார். 49 வயதாகும் கீதா கோபிநாத்தின் பூர்வீகம் கேரளாவாகும். டெல்லி பல்கலைக்கழகத்திலும், வாஷிங்டன் பல்கலைக் கழகத்திலும் பட்டப்படிப்பை பயின்றவர்.

கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டிருந்த அவர், நிதியத்தின் நிர்வாக பொறுப்புக்கு தேர்வாகி இருப்பது இந்தியர்களை பெருமைப்பட செய்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரியான கிறிஸ்டலினா ஜார்ஜீவா-வுக்கு அடுத்தபடியாகவும், இவருக்குக் கீழ் இருக்கும் முதல் அதிகாரியாகவும் கீதா கோபிநாத் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும். வாஷிங்டன்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகளுக்குப் பொருளாதாரச் சரிவில் இருக்கும் நிதியுதவி செய்யும் மிக முக்கியமான அமைப்பாக இருக்கும் காரணத்தால், இந்த அமைப்பின் உயர் அதிகாரிகள் அறிவிப்புகளும், முடிவுகளும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு மிகமுக்கியமானதாக உள்ளது.

Related Stories: